நஞ்சை சம்பா சாகுபடியில் சான்றுபெற்ற விதைநெல்லை பயிரிட வேண்டும்


நஞ்சை சம்பா சாகுபடியில் சான்றுபெற்ற விதைநெல்லை பயிரிட வேண்டும்
x

சான்று பெற்ற விதை நெல்களை பயிரிட வேண்டும்

திருப்பூர்

முத்தூர்,

முத்தூர் - நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா சாகுபடியில் சான்று பெற்ற விதை நெல்களை பயிரிட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் அறிவுரை கூறியுள்ளார்.

கீழ்பவானி பாசன பகுதிகள்

திருப்பூர் மாவட்டம் முத்தூர், நத்தக்காடையூர் நகர சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் சாகுபடி மற்றும் சாதாரண முறையில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் அரசு வேளாண்மைத்துறை விதை ஆய்வுத்துறை பரிந்துரை செய்து உள்ள சான்று பெற்ற விதை நெல்களை வாங்கி சாகுபடி செய்ய முன்வர வேண்டும். ஏனெனில் சான்று பெற்ற நெல் விதைகள் சரியான தரத்தை உறுதி செய்ய கூடியதாகும். மேலும் விவசாயிகள் சான்று பெற்ற விதை நெல்கள் விவரம் அட்டையுடன் (லேபிள்) கூடிய பைகளில் உள்ளதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் விதை நெல்களை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விவசாயிகள் வாங்க வேண்டும்.

கான்று பெற்ற விதைகள்

மேலும் விதை நெல்களை வாங்கும் போது விவசாயிகள் வாங்கும் தேதி, விதை ரக பெயர், விதை குவியல் எண், காலாவதி தேதி மற்றும் வாங்குபவர், விற்பனையாளர் இருவரின் கையொப்பம் ஆகியவை குறிப்பிடப்பட்ட விற்பனை ரசீதை தவறாமல் கேட்டு பெற வேண்டும். மேலும் விதை நெல் உரிமம் இல்லாத விற்பனை கடை, விற்பனை ரசீது வழங்காத விற்பனையாளர்கள் ஆகியோர்களிடம் இருந்து விதை நெல்களை விவசாயிகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

எனவே இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் சான்று பெற்ற விதை நெல்களை வாங்கி சாகுபடி செய்து இந்த ஆண்டு நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற்று பயன் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story