நெல் கொள்முதல் நிறுத்தம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


நெல் கொள்முதல் நிறுத்தம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றுமுன்தினம் இரவு வலுப்பெற்றது. இலங்கை திரிகோணமலைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றுமுன்தினம் வரை கனமழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை மாவட்டத்தில் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது.

நேற்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் லேசான காற்றுடன் கனமழை பெய்தது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி முன்பு சாலையில் ஒரு மரம் சாய்ந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்தது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சீர்காழி-20, தரங்கம்பாடி-18, செம்பனார்கோவில்-14, மயிலாடுதுறை -13, மணல்மேடு-13.

இந்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் மழையில் நனைந்து சாய்ந்து முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய போதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் மழையில் நனைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிறுத்தம்

மயிலாடுதுறையில் தொடர் மழைகாரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள நிலையில், அறுவடை பணிகள் தொடங்கியதன் காரணமாக 90 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story