கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில், கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தஞ்சையில், கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சாமி கும்பிட...
தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் உமா(வயது 50). இவர் நேற்று காலை தனது உறவினர்களுடன் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தார்.
கோவிலின் உள்ளே அவர் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தபோது கோவிலில் காவி வேட்டி அணிந்த மர்ம நபர் ஒருவர் உமாவை பின்தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார். இதனை அறியாத உமா சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியில் வந்து தான் வந்த காரில் ஏற முயன்றார்.
7 பவுன் சங்கிலி பறிப்பு
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அந்த மர்ம நபர், உமாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்செல்ல முயன்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத உமா அசிர்ச்சி அடைந்த திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு கோவிலில் இருந்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த நபர் அணிந்திருந்த காவி வேட்டி மற்றும் கயிற்றால் அங்கேயே கட்டி வைத்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து உமா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது