கோவை, நீலகிரியில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்ய வாய்ப்பு


கோவை, நீலகிரியில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 5:30 AM IST (Updated: 1 Jun 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.

பலத்த மழை

கோவையில் கடந்த சில நாட்களாக காலையில் சுட்டெரிக்கும் வெயிலும், மதியத்திற்கு பின் மழையும் பெய்து வருகிறது. இந்த இருவேறு காலநிலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கோவை பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம் 3 மணி அளவில் லேசான மழை பெய்தது. வாகன ஒட்டிகள் இந்த மழையில் நனைந்த படி சென்றனர்.

இதேபோல் வால்பாறையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 1.30 மணி வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் வால்பாறை நகர் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. மேலும் மழையால் வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் தண்ணீர் அருவியாக கொட்டியது. இதேபோல் கல்லாறு, அன்னூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை காணப்பட்டன.

தென்மேற்கு பருவமழை

கோவையில் ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு பருவமழையானது விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-

கோவையில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆண்டு தோறும் கோவையில் 210 மி.மீ. அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு 9 சதவீதம் அளவிற்கு குறைந்து 190 மி.மீ. அளவிற்கு தென் மேற்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை சராசரியாக 875 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் நீலகிரியில் 800 மி.மீ. அளவிற்கு பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவையில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம்:-

அன்னூர்-16.2, சிங்கோனா-11, சின்னகல்லாறு-11, வால்பாறை பி.ஏ.பி.-19, வால்பாறை தாலுகா-18, பெரிய நாயக்கன்பாளையம்-35 ஆகும்.


Next Story