தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
x

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. 10 முதல் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவான வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருக்கிறது.

அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் மட்டும் வெயில் 100 டிகிரியை கடந்து இருந்தது. மற்ற இடங்களில் இயல்பைவிட வெப்பம் குறைந்து காணப்படுகிறது. இடையிடையே சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவதால், அந்தப்பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

கனமழை பெய்யும் இடங்கள்

அதன்படி, தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத்திசை காற்றும், மேற்குத்திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் (சனிக்கிழமை) சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மழை அளவு

சென்னையைப் பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'நாங்குநேரியில் 7 செ.மீ., மழையும், அதிராம்பட்டினம், பெருஞ்சாணி அணை, வம்பன், புத்தன் அணை போன்ற பகுதிகளில் தலா 6 செ.மீ., மழையும், திருநெல்வேலி, சுருளக்கோடு, திண்டுக்கல், திருபுவனம், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., மழையும், இலுப்பூர், தாளவாடி, சிறுவாணி அடிவாரம், குருந்தன்காடு தலாவில் 4 செ.மீ., மழையும், பூதப்பாண்டி, தக்கலை, சித்தார், கயத்தாறு, பேச்சிப்பாறை, சங்கரன்கோவில், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.


Next Story