வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்' இன்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், மேலும் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
கோடை வெயிலுக்கு இதமாக கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'
அதன்படி, இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதில் ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அங்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை பெய்யக்கூடிய இடங்கள்
நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் (புதன்கிழமை) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'பேரையூர் 11 செ.மீ., ராதாபுரம் 9 செ.மீ., பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பில்லூர் அணை தலா 8 செ.மீ., கோடநாடு, வாலாஜா, மணமேல்குடி, கோவில்பட்டி தலா 7 செ.மீ., வத்திராயிருப்பு, கறம்பக்குடி, சாத்தூர், கோவில்பட்டி தலா 6 செ.மீ., அம்மூர், குன்னூர், எட்டயபுரம், ஆற்காடு, மயிலாடி, ஏற்காடு, ராணிப்பேட்டை, கீழ் கோத்தகிரி எஸ்டேட் தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.