தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (21.11.2022) காலை 8.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 470 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
(22.11.2022) நாளை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
23.11.2022 முதல் 25.11.2022 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.