தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
13-ந் தேதி (இன்று) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேற்று மதியம் 1 மணியளவிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பி.டி.ஓ. பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணை பகுதியில் 8 செ.மீ மழையும், மாஞ்சோலை, காக்காச்சி, நீலகிரி மாவட்டம் ஆதார் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.