பூமி, நிலவை படம் பிடித்து அனுப்பிய 'சந்திரயான்-3' விண்கலம்


பூமி, நிலவை படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம்
x

‘சந்திரயான்-3’ விண்கலம் பூமியையும், நிலவையும் படம் எடுத்து அனுப்பி உள்ளது.

சென்னை,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' விண்கலத்தை விண்ணில் ஏவி உள்ளது. இது புவிவட்ட சுற்றுப்பாதையை கடந்து தற்போது நிலவு வட்ட சுற்றுப்பாதையில் பயணித்து வருகிறது.

புவிவட்டப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது படிப்படியாக அதன் உயரம் அதிகரிக்கப்பட்டு வந்தது. தற்போது நிலவு சுற்றுவட்டப்பாதையில் பயணிப்பதால் படிப்படியாக அதனுடைய உயரம் குறைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக 'சந்திரயான்-3' விண்கலத்தின் நிலவு பயணம் 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கட்டம் பூமியில் இருந்து விண்ணை நோக்கி செல்வது, 2-வது கட்டம் பூமியை சுற்றுவது, 3-வது கட்டம் பூமியில் இருந்து நிலவை நோக்கிய பயணம், 4-வது கட்டம் நிலவை சுற்றுவது, 5-வது கட்டம் நிலவில் தரையிறங்குவது என்று பிரிக்கப்பட்டு உள்ளது.

இதில் முதல் 3 கட்டங்களையும் 'சந்திரயான்-3' விண்கலம் வெற்றிகரமாக முடித்து உள்ளது. தற்போது 4-வது கட்டமான நிலவை சுற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

பூமி, நிலவை படம் பிடித்தது

இந்த நிலையில் தற்போது 'சந்திரயான்-3' விண்கலம் நிலவில் இருந்து குறைந்த பட்ச தூரமான 174 கி.மீ., தூரத்திலும், அதிகபட்சமாக 1,437 கி.மீ. தொலைவிலும் சுற்றிவரும் வகையில் உயரம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது 14-ந்தேதி மீண்டும் உயரம் குறைக்கப்பட இருக்கிறது.

குறிப்பாக குறைந்த பட்ச தூரம் 126 கி.மீ. அருகிலும், அதிகபட்ச தூரம் 164 கி.மீ. தொலைவிலும் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத்தொடர்ந்து வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் லேண்டர் மெதுவாக தரை இறங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். லேண்டரில் இருந்து வெளியே வரும் ரோவரில் சூரிய சக்தி தகடுகள், ஆன்டெனா, கேமராக்கள் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும். இதனைத்தொடர்ந்து 5-வது கட்டமாக 'சந்திரயான்-3' விண்கலம் நிலவில் மெதுவான முறையில் தரையிறங்கி வரலாற்று சாதனையை படைக்கும்.

கடந்த 6-ந்தேதி 'சந்திரயான்-3' விண்கலம் நிலவின் மேற்பரப்பை வீடியோ எடுத்து அனுப்பி இருந்தது. இதற்கிடையே தற்போது பூமி, நிலவை படம் பிடித்து 2 புகைப்படங்களை 'சந்திரயான்-3' விண்கலம் பெங்களுருவில் உள்ள பூமி தரைகட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி உள்ளது.


Next Story