சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து


சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து
x

நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்த வெற்றியால், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன்மூலம் விண்வெளியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. விண்வெளியில் சரித்திரச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், சந்திராயன்-3 திட்ட இயக்குனர் P.வீரமுத்துவேலுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். விண்வெளியில் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி LVM ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இந்தியரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இரவு பகல் பாராமல், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. உலக நாடுகள் பல முயற்சி செய்தும் நெருங்க முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்" என்று கூறியுள்ளார்.



Next Story