நெல்லை திருமண்டல அலுவலகத்தில் மதபோதகருக்கு அடி-உதை
நெல்லை திருமண்டல அலுவலகத்தில் மத போதகருக்கு அடி-உதை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பேராயராக பர்னபாஸ் உள்ளார். இந்த நிலையில் திருமண்டல கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேராயர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இருதரப்பினர் மோதல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய தாளாளர் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது, இரு தரப்பினர் இடையே மோதலும், கைகலப்பும் நடந்தது.
இதையடுத்து பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை ஒரு தரப்பினர் பூட்டு போட்டு பூட்டிச் சென்றனர். எனவே, அந்த அறைகளை மீண்டும் திறக்க வேண்டும், அலுவலக பணிகளை முடக்க கூடாது என்று பேராயர் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
மத போதகர்
இந்த நிலையில் இட்டேரி பகுதியை சேர்ந்த மதபோதகரான காட்பிரே நோபுள் என்பவர் நேற்று காலையில் பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்திற்கு சென்றார். அவர், திருமண்டல அலுவலக அறைகளை பூட்டி வைப்பதால் பணிகள் முடக்கப்படுவதாக கூறியும், அதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
அப்போது அங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில் திடீரென சிலர் காட்பிரே நோபுளை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், ஓட ஓட அவரை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார்
பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் 'லே' செயலாளர் ஜெயசிங் நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலமானது மிஷினரிகளால் மக்களுக்கு கல்வி வழங்க வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு சிலருடைய சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இதனால் நேர்மையான நிர்வாகம் வேண்டும் என்று தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நிர்வாகிகள் சிறந்த முறையில் நிர்வாகம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பேராயர் தன்னிச்சையாக நிர்வாகத்தினரை கலந்தாலோசிக்காமல் சில பொறுப்புகள், பதவிகளுக்கு ஆட்களை நியமித்துள்ளார். இது செல்லாது. பேராயருக்கு ஊழியம் செய்வது மட்டும்தான் வேலை. நிர்வாகத்தை நடத்துவது நிர்வாகக்குழு கமிட்டி தான். இந்த நிலையில் பேராயர், நிர்வாகக்குழு கமிட்டி ஒப்புதல் இல்லாமல் சிலரை நிர்வாகிகளாக நியமித்துள்ளார். அதுவும் செல்லாது. நாங்கள் மேலாளராக தங்கத்துரையை நியமித்துள்ளோம்.
முறைகேடு
இந்த நிலையில் திருமண்டலத்திற்கு சம்பந்தமில்லாத தனியாக சபை நடத்தி வரும் காட்பிரே நோபுள் தன்னை பொருளாளராக பேராயர் நியமித்து உள்ளார் என்று கூறி, திருமண்டல அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஏற்கனவே மக்களால் நியமிக்கப்பட்ட பொருளாளர் இருக்கும்பொழுது நீங்கள் எப்படி பொருளாளர் என்று கூறலாம்? என்று அங்கிருந்தவர்கள் கேட்டதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கலவரத்தை ஏற்படுத்தி திருமண்டல அலுவலகத்தை பூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள். ஏற்கனவே ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருமண்டல பொருளாளர் ஏ.டி.ஜே.சி.மனோகர், வக்கீல்கள் ஜான், பிரசன்னா, மேலாளர் தங்கத்துரை, செயற்குழு உறுப்பினர்கள் ஜீவக்குமார், ஏ.சி.டி.ராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பலத்த பாதுகாப்பு
இதற்கிடையே, மத போதகர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெல்லை திருமண்டல அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தையொட்டி, அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.