3 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுராந்தகர் சாமி கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


3 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுராந்தகர் சாமி கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கூவம் திரிபுராந்தகர் சாமி கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே கூவத்தில் திரிபுராந்தகர் சாமி கோவில் உள்ளது. தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 சிவதலங்களில் இது 14-வது கோவிலாகும். மேலும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலில் இறைவனது திருமேனியை அர்ச்சகர்கள் தொட்டு பூஜை செய்வதில்லை. இதன் காரணமாக சாமிக்கு தீண்டா திருமேனியர் என்ற பெயரும் உள்ளது. பல சிறப்புகள் கொண்ட இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவில் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சூரிய பிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், அதிகார நந்தி வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை 9 மணி அளவில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுரசுந்தரி அம்மாளுடன், திரிபுராந்தகர் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதனை கூவம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர். முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் சாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மே 4-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் சாமிக்கு தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கூவம் திரிபுரசுந்தரி அம்மாள் சமேத திரிபுராந்தகர் சாமி கோவில் தக்கார் டில்லிபாபு தலைமையில் கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் விழா குழுவினர், கூவம் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story