விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி
விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் நேற்று தேர்பவனி நடைபெற்றது.
விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் நேற்று தேர்பவனி நடைபெற்றது.
ஆலய திருவிழா
விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தூய இன்னாசியார் ஆலய திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று மாலை சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது.
இதில் மதுரை உயர் மறை மாநில பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை, புனித இன்னாசியார் உருவம் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகரை வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர்.
திருப்பலி
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருவிழா திருப்பலியும் மறையுரையும் நடைபெறுகிறது. மாலை நன்றி திருப்பலி மற்றும் நற்கருணை பவனியுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
திருவிழா ஏற்பாடுகளை விருதுநகர் பங்குத்தந்தை அருள் ராயன், துணை பங்கு தந்தை சகாய ஜான் பிரிட்டோ தலைமையில் பங்கு பேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.