கோவில் விழாவில் நடுவழியில் நிறுத்தப்பட்ட தேர்


கோவில் விழாவில் நடுவழியில் நிறுத்தப்பட்ட தேர்
x

கோவில் விழாவில் நடுவழியில் தேர் நிறுத்தப்பட்டது.

திருச்சி

லால்குடி:

தேரோட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி காப்புக்கட்டப்பட்டது. 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் பொங்கல் வைத்து, இரவில் குதிரை வாகனத்தில் செல்லியம்மன் வீதி உலா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் காலை 11.30 மணிக்கு தேர் புறப்பாடும், கிடா வெட்டுதலும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செல்லியம்மன் கோவிலில் இருந்து அனைத்து தரப்பு பக்தர்களும் தேரை வடம் பிடித்து பொதுச்சாவடி வரை இழுத்தனர்.

வாக்குவாதம்

பின்னர் பொதுச்சாவடியில் இருந்து ஒரு சமூகத்தை சேர்ந்த மண்டி வரை அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று, மீண்டும் பொதுச்சாவடிக்கு தேரை இழுத்து வந்தனர். பின்னர் பொதுச்சாவடியில் இருந்து முருகன் கோவில் வரை மற்றொரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

வேறொரு சமூகத்தை சேர்ந்த மக்களின் மண்டிக்கு 20 மீட்டர் தூரத்தில் தேர் இழுத்துவரப்பட்டபோது, அங்கிருந்து மண்டி வரை அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுத்துச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் தேரை இழுத்துச்செல்ல, ஏற்கனவே தேரை இழுத்து வந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சினையால் தேர் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

நடுவழியில் நிறுத்தப்பட்டது

இதையடுத்து 2 சமூகத்தை சேர்ந்தவர்களுடன் லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குந்தலிங்கம், லால்குடி துணை சூப்பிரண்டு சீதாராமன், ஜீயபுரம் துணை சூப்பிரண்டு பரவாசுதேவன், லால்குடி தாசில்தார் சிஸிலினாசுகந்தி, அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து கூடுதல் சூப்பிரண்டு குந்தலிங்கம் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு செல்லியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் மதியம் 2.15 மணிக்கு நிறுத்தப்பட்ட தேர் சுமார் 2¼ மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு கோவிலுக்கு இழுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

31 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேர் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story