முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரை திருவிழா
திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா கடந்த 2-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 9-ந்தேதி மாலை உற்சவர் அம்பாள் இளையாத்தான்குடியில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டி கோவிலுக்கு வந்தடைந்தது.
பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 6-ம் திருநாள் அன்று அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் திருநாள் அன்று பூப்பல்லக்கிலும், 8-ம் திருநாள் அன்று குதிரை வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தார்.
தேரோட்டம்
9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மாலை 5.15 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 10-ம் திருநாளான இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை உற்சவர் அம்பாள் கீரணிப்பட்டி கோவிலில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தான்குடிக்கு திரும்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.