திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் இன்று ரோகிணி தீபம் ஏற்றப்படுகிறது


திருமாணிக்குழி    வாமனபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்    இன்று ரோகிணி தீபம் ஏற்றப்படுகிறது
x

திருமாணிக்குழி வாமன புரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். இன்று ரோகிணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

பிரம்மோற்சவம்

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 27-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்ற வருகிறது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று வாமனபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் வாமனபுரீஸ்வரர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் சாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

இதையடுத்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

பின்னர்மாடவீதி வழியாக தேர் உலா வந்து மீண்டும் நிலை யை அடைந்தது‌. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவர் அணி தி.மு.க. துணை அமைப்பாளர் பாலாஜி, கோவில் செயல் அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடகிருஷ்ணன், ஞானசுந்தரம் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ரோகிணி தீபம்

மாலையில் பஞ்சமூர்த்திகள் வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று(புதன்கிழமை) மாலை ரோகிணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முன்னதாக காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. பின்னர் மாலையில் கோவில் எதிர்புறம் உள்ள மலை மீது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று ரோகிணி தீபம் ஏற்றப்படுகிறது. நாளை(வியாழக்கிழமை) ஸ்ரீ சந்திரசேகரர் கிரி பிரதட்சணம், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஸ்ரீ சண்டேஸ்வரர் சாமி புறப்பாடு நடைபெற்று விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story