பெருங்குடி வேண்டி வந்த அம்மன் கோவில் தேரோட்டம்


பெருங்குடி வேண்டி வந்த அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

வேண்டி வந்த அம்மன் கோவில்

அரிமளம் ஒன்றியம் பெருங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேண்டி வந்த அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு நாள்தோறும் பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்தும், உண்டியலில் காணிக்கை செலுத்தியும் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

கடந்த 27-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், உடல் முழுவதும் அலகு குத்தியும் தீமிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

தேரோட்டம்

மாலை தேரோட்டம் நடைபெற்றது. தேருக்கு முன்பாக ரதத்தில் விநாயகர் சுவாமி முன்னோடி தெய்வமாக சென்றது. அதன் பின்னர் வேண்டி வந்த அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வைர தேரில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி வீதிகளில் வலம் வந்து நிலை வந்தடைந்தது. தேர் செல்லும் வழிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அப்போது தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பாரி எடுப்பு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (புதன்கிழமை) அம்மன் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதையடுத்து மாலை நடுமாடு, பூஞ்சிட்டு மாடு என இருபிரிவாக மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெறுகிறது. இரவு கோவில் முன்பு உள்ள கலையரங்கில் வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு பெரிய மாடு , கரிச்சான் மாடு என இருபிரிவாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பெருங்குடி கிராமமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story