மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை


மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை
x

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா நடத்தாதது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அலோசனை நடத்தினர்.

செங்கல்பட்டு

பூதத்தாழ்வார் அவதார விழா

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ திவ்விய தலங்களில் 63-வது தலமாக உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் யாகசாலை பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டு, மூலவர் கருவறை மூடப்பட்டு கோவில் கோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளையும் பராமரிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மூலவர் கருவறை மூடப்பட்டதன் காரணமாக கடந்த 11 மாதமாக திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. மாறாக உற்சவர் வழிபாடு மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பூதத்தாழ்வார் அவதரித்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பூதத்தாழ்வார் அவதார திருவிழா நடைபெறுவது வழக்கம். இநத நிலையில் இந்த கோவிலில் பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் பூதத்தாழ்வார் அவதார விழா நடத்தப்படமாட்டது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

கோர்ட்டில் வழக்கு

இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வெங்கட் சவுரிராஜன் என்பவர் 1980-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் திருப்பணிக்காக கோவில் பாலாலயத்தில் இருந்தபோது பூதத்தாழ்வாருக்கு உள்பிரகாரத்தில் திருமஞ்சனம், மங்களாசானம் நடத்தப்பட்டபோது, இந்த ஆண்டு நடைபெற உள்ள பூதத்தாழ்வார் அவதார திருவிழா ஏன் நிறுத்தப்பட்டது என்று கோவில் நிர்வாகத்தை கேள்வி எழுப்பி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பற்றி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, இது குறித்து அர்ச்சகர்கள், கோவில் சார்புடையவர்கள், உற்சவதாரர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆலோசனை

அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தபாரதிதாசன், இணை ஆணையர் வான்மதி, கோவில் நிர்வாக அதிகாரி சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலுக்கு வந்து அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது அர்ச்சகர்கள் தரப்பில் சிலர் கருத்துக்களை கூறும்போது, கோவிலில் பாலாலயம் நடத்தப்பட்ட பிறகு திருவிழாக்கள் நடத்தினால் திருப்பணி நடத்தும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால், திருவிழாக்கள் நடத்துவது ஐதீகத்தில் இல்லை என்றும், திருப்பணி நடத்தி முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பிறகுதான் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ள நடைமுறை என்றும் கூறினர்.

கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்

மேலும் சில கோவில்கள் பாலாலயத்தில் இருக்கும் போது திருவிழாக்கள் நடத்தும் பழக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், கடற்கரை ஓரங்களில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம தலசயன பெருமாள் கோவில் உள்ளிட்ட குறிப்பிட்ட திவ்விய தேச பெருமாள் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தும் வழக்கம் நடைமுறையில் இல்லை என்றும் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அர்ச்சகர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டவர்களிடம் முழு கருத்தை கேட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் வீடியோவுடன் அதனை பதிவு செய்தனர். பிறகு பூதத்தாழ்வார் திருவிழா ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிக்கையாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story