உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 100 இடங்களில் நல உதவிகள் வழங்கும் விழா
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நல உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட இருப்பதாக கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகள் இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த பதவி சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டது. பதவி கிடைத்ததும் மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என கூறிய அவர், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியை திறம்பட செயலாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணியினர் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகள் மற்றும் ரத்ததான முகாம்களை நடத்தியும் கொண்டாட தயாராகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
100 இடங்களில் நல உதவிகள்
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கூறியதாவது:-
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்து உள்ளோம். இதையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, ரத்ததான முகாம் நடத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளோம்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்தமாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டத்தை பொறுத்த வரையில் 100 இடங்களில் மாபெரும் நல உதவிகள் வழங்கும் விழாவை நடத்த உள்ளோம்.
இதில் அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.