திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர்


கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பூர் ராக்கியாபாளையம் ஜெய்நகர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு என நினைத்து அருகில் உள்ள வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முக்கிய சாலை சந்திப்புகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து விடிய, விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. கோவில், தேவாலயம், பள்ளிவாசல் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்காக திருச்சி மாநகரம், சிறப்பு இலக்கு படையினர், பயிற்சி முடித்த போலீசார் என வெளியூரில் இருந்து 250 பேர் காவல் பணிக்காக திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் மாநகரில் உள்ள 350 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநகரம் முழுவதும் 600 போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைவர்களின் சிலைகளுக்கு முன்பும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களை சோதனையிடும் பணியை போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு செய்தார். திருப்பூர் நகருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டன. அதுபோல் மாநகரில் இருந்து வெளியே செல்லும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


Related Tags :
Next Story