செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு


செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு
x

கோவையில் இருந்து நீலகிரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

கோவையில் இருந்து நீலகிரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் நேற்று கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஏந்தி சென்று மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலமாக சேரிங்கிராசுக்கு வந்தது.

ஊர்வலம்

அப்போது சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது. பின்னர் இந்த ஜோதியானது ஊட்டி மத்திய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து செஸ் ஒலிம்பியாட்டி போட்டியை முன்னிட்டு, தமிழகத்தின் உயர்ந்த மலை சிகரமான தொட்டபெட்டாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செஸ் போட்டி நடத்தப்பட்டது.

மேலும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்பி ஸ்பாட்டில் மாணவ -மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி ஆர்.டி.ஓ‌. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story