செம்பரம்பாக்கம் ஏரி 86 சதவீதம் நிரம்பியது: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 டி.எம்.சி. நீர் இருப்பு
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9.17 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளதாகவும், புழல் 90 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரி 86 சதவீதமும் நிரம்பி உள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரிகளுக்கு 70 கன அடி வரத்து
சென்னை மாநகருக்கு குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 2 தவணைகளாக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
தற்போது ஏரிகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் போதிய அளவு நீர் இருப்பு போன்ற காரணங்களால் நீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டு கொண்டதற்கு இணங்க ஆந்திர மாநில அரசு நீர் திறப்பை நிறுத்தி உள்ளது. மாறாக புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஓரளவு ஏரிகளுக்கு நீர் வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி 70 கன அடி நீர் ஏரிகளுக்கு வந்து உள்ளது.
தேர்வாய் கண்டிகை நிரம்பியது
குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,582 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 972 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி உள்ளது.
அதேபோல், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 149 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 838.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
9.17 டி.எம்.சி. இருப்பு
பூண்டி ஏரியில் 48.96 சதவீதமும், சோழவரத்தில் 11.93 சதவீதமும், புழல் ஏரியில் 90.06 சதவீதமும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 86.39 சதவீதமும், வீராணம் ஏரியில் 57.23 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 69.36 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 9 ஆயிரத்து 170 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.
தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவ மழை மூலம் தான் தமிழகம் அதிகம் பயனடையும். அந்த வகையில் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் தமிழகத்திற்கு அதிக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு எப்படியும் அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதற்காக ஏரிகளை தயார் படுத்தி வருகிறோம். சென்னை மாநகர பகுதிக்கு 921 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மாதம் 1 டி.எம்.சி. வீதம் நீர் தேவைப்படுகிறது. அந்த வகையில் தற்போது, அடுத்த 9 மாதத்திற்கு நீர் இருப்பு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.