மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவனுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்| எடப்பாளையம் கிராமம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பவன் சாய். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கு சேர்ந்துள்ளார். அப்போது முதல் தவணையாக ரூ.10 லட்சத்து 6 ஆயிரத்து 50 செலுத்தினார். பின்னர் அதே ஆண்டு 2-வது தவணையாக ரூ.9 லட்சம் செலுத்தியுள்ளார். அந்த கல்லூரியில் மருத்துவ கல்லூரிக்கு தேவையான எந்த விதமான கட்டமைப்பும் இல்லை. போதிய ஆசிரியர்களும் இல்லை. அதனால் அந்த கல்லூரி மீது வழக்கு தொடரப்பட்டு சென்னை ஐகோர்ட்டு அந்த மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் வெவ்வேறு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர்.
இது போல திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பவன்சாய் மட்டும் மன உளைச்சலுக்கு ஆளாகியும் ஒரு வருட படிப்பு தாமதமானதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 18-7-2022 அன்று வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர் காசிபாண்டியன், உறுப்பினர் ஜவஹர் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள். இதில் பவன்சாய் செலுத்திய கல்வி கட்டணம் ரூ.19 லட்சத்து 6 ஆயிரத்து 50-ஐ திருப்பி தர வேண்டியும், மாணவரின் ஒரு ஆண்டு படிப்பு வீனாக போனதற்கு இழப்பீட்டு தொகையாக மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6 லட்சமும், மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரு.25 லட்சத்து 6 ஆயிரத்து 50 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.