சென்னை: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு...!
சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சேலத்தை சேர்ந்தவர் அரிபாபு(46), வழக்கறிஞரான இவர் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னைக்கு தனது மூத்த வக்கீலை பார்ப்பதற்காக தனது காரில் சென்னைக்கு வந்தவர் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இன்று மாலை திருமங்கலத்தில் உள்ள அவரது மூத்த வக்கீலை பார்ப்பதற்காக தனது காரில் கோயம்பேடு 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
காரை டிரைவர் அன்பரசு ஓட்டினார். கோயம்பேடு மேம்பாலம் கீழே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் நின்று விட்டது. பின்னர் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் காரில் இருந்து உடனடியாக இறங்கினார்கள்.
அப்போது கார் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், கடைகாரர்களும் தண்ணீரை ஊற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் காரில் இருந்த லேப்டாப் மற்றும் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.