சென்னை புத்தக கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்


சென்னை புத்தக கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்
x

சென்னை புத்தக கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொள்ள உள்ளார்.

கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளுடன் தலா ரூ.1 லட்சமும், 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

அதன்படி, கலைஞரின் பொற்கிழி விருதுகளில் 100-வது விருது இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. நாளை தொடங்கும் இந்த புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம்.

கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த அரங்குகளில் வெளிநாடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தினமும் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் பேச்சுகளும் நடைபெற உள்ளன. திருநங்கையர்களால் நடத்தப்பட்டு வரும் 'குயர் பப்ளிசிங் ஹவுஸ்' நிறுவனத்துக்கும் பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழக அரசு சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, பபாசி நடத்தும் புத்தக கண்காட்சிக்கு அருகில் இதற்கென்று தனி அரங்கமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி வருகிற 16, 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 30 முதல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க இருக்கின்றன. இதனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.


Next Story