சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 67 லட்சம் பறிமுதல் - ஆந்திர மாநில வாலிபரிடம் விசாரணை
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகள் மூலம் சென்னைக்கு கஞ்சா எடுத்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நசரத்பேட்டை,
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகள் மூலம் சென்னைக்கு கஞ்சா எடுத்து வருவதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை போலீசார் திருமழிசை கூட்டு சாலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்த வந்த பஸ்சில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரிடம் சோதனை செய்தனர்.
அந்த நபர் தன்னிடம் ரூ.20 லட்சம் இருப்பதாகவும் நகை வாங்குவதற்காக செல்வதாக தெரிவித்தார். மேலும் உரிய ஆவணங்களை கேட்டபோது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை இறக்கி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரித்த போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உமேஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் வரிடம் இருந்த பணத்தை எண்ணி பார்த்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை சவுகார்பேட்டையில் நகைகள் வாங்குவதற்கு எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் உமேசை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.