சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை; 8 பேர் மீது வழக்கு


சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை; 8 பேர் மீது வழக்கு
x

தா.பழூர் அருகே சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் தையல்நாயகிக்கும், அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவருக்கும் நேற்று முன்தினம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில் மணப்பெண்ணின் அண்ணனும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சாமிநாதன் (வயது 37) என்பவர் திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே திருமண மண்டபத்தின் அருகே உள்ள ஒரு டீக்கடை வாசலில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார்.பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் வக்கீல் மர்ம ஆசாமிகளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு நாச்சியார் கோவிலில் நடைபெற்ற செல்வமணி என்பவரது கொலை வழக்கில் வக்கீல் சாமிநாதன் 2-வது குற்றவாளியாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பல் ஜெயங்கொண்டம் சாலையில் செல்வது போல் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. ஆனால் அவர்கள் ஜெயங்கொண்டம் சாலையில் செல்வது போல் போக்குக்காட்டி விட்டு மீண்டும் தா.பழூர் வழியாகவே கும்பகோணம் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், நாச்சியார் கோவிலில் சாமிநாதனால் கொல்லப்பட்ட செல்வமணி வீட்டில் உள்ளவர்களை போலீசார் விசாரிக்க சென்றபோது அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. இந்தநிலையில், செல்வமணியின் மகன் கோகுலை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீஸ் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர். போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக வழக்கை விசாரித்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல் சாமிநாதனின் தந்தை சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் இளையராஜா என்பவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story