சென்னையில் சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ் படங்கள் திரையிட தேர்வு


சென்னையில் சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ் படங்கள் திரையிட தேர்வு
x

சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளில் இருந்து 126 படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னை,

தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் சென்னையில் 21-வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளில் இருந்து 126 படங்கள் திரையிடப்படுகின்றன.

விருது வென்ற வெளிநாட்டு படங்களான தி டீச்சர்ஸ் லவுஞ்ச், பேர்ப்பக்ட் டேஸ், டூ நாட் எஸ்பெக்ட் டூ மச் பிரம் தி யேண்டு ஆப் தி வேல்ட், பாலன் லீப்ஸ், ஸ்வீட் டீர்ம்ஸ், மெலடி உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.

19 இந்திய மொழி படங்கள் திரையிடப்பட உள்ளன. அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன. மாமன்னன், போர் தொழில், ராவணக் கோட்டம், சாயாவனம், ஸ்டார்ட் கேமரா ஆக் ஷன், செம்பி, உடன்பால், விடுதலை 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய 12 தமிழ் படங்களும் போட்டி பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளன.

பி.வி.ஆர்., ஐநாக்ஸ் சினிமாஸ், சத்யம் சினிமாஸ், சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.

சர்வதேச திரைப்பட தொடக்க விழா 14-ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற 'அனாடமி ஆப் எ பால்' படம் திரையிடப்படுகிறது.

திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.


Next Story