சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் நேரு நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் மணிமொழி (வயது 61). அரசு விடுதி காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி கிருஷ்ணவேணி சீர் மரபினர் நல கல்லூரி மாணவியர் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணவேணி வேலைக்கு சென்று விட்டார்.. மணிமொழி வங்கி வேலையாக வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவரின் 82 வயதான தாய் கோவிந்தம்மாள் மட்டும் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த மர்ம நபர் கோவிந்தம்மாளை வாயை பொத்தி மிரட்டி 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கோவிந்தம்மாளின் வீட்டின் அருகில் குடியிருந்து வந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி கோவிந்தம்மாளின் வீட்டு அருகே சென்று வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் அருண்குமார் என்பவரின் மகன் ரிஷிகேஷ் (27) என்பதும், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கோவிந்தம்மாள் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 7 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.