சென்னை-கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு


சென்னை-கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு
x

சென்னை-கன்னியாகுமரி இடையேயான சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மந்திரிகள் மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

சென்னை,

பெங்களூரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தலைமையில் இன்று அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.அதில், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை 64 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள சாலைகளை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாவட்டம் மற்றும் தாலுகா தலைமைகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளை 2026-ம் ஆண்டிற்குள் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2,200 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலையாகவும் மற்றும் 6,700 கி.மீ. நீளத்திற்கு 2 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1,280 தரைப்பாலங்கள் 2026-ம் ஆண்டிற்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.

மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் பிற மாவட்டச் சாலைகளில் உள்ள 'ரெயில்வே லெவல் கிராசிங்'கள், முன்னுரிமை அடிப்படையில் சாலை மேம்பாலமாக மாற்றப்படுகின்றன. தமிழ்நாட்டின் 10 ஆயிரம் கி.மீ. பஞ்சாயத்துச் சாலைகள், பஞ்சாயத்து யூனியன் சாலைகள் 5 ஆண்டுகளில், பிற மாவட்டச் சாலை தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சில முக்கியமான திட்டங்களை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும். அதன்படி, சென்னை–கன்னியாகுமரி சாலையை 6 மற்றும் 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story