சென்னை-மதுரவாயல் உயர்மட்ட விரைவுசாலை பணி ஜூனில் தொடங்கும் - மத்திய மந்திரி சர்பானந்தா சோனாவால்


சென்னை-மதுரவாயல் உயர்மட்ட விரைவுசாலை பணி ஜூனில் தொடங்கும் - மத்திய மந்திரி சர்பானந்தா சோனாவால்
x

சென்னை-மதுரவாயல் இடையிலான உயர்மட்ட விரைவுசாலை பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று மத்திய மந்திரி சர்பானந்தா சோனாவால் அறிவித்தார்.

4 புதிய திட்டங்கள் தொடக்கம்

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து மந்திரி சர்பானந்தா சோனாவால் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வருகை தந்தார். அங்கு அவர், கூடுதலாக 10 லட்சம் டன் சரக்குகளை கையாளும் வசதி, 40 கே.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சென்னை துறைமுகம் சார்பில் ஜோலார்பேட்டையில் சரக்குகள் சேகரிப்பு கிடங்கு, சென்னை துறைமுகத்தில் காமராஜர் துறைமுக அணுகு சாலையான வல்லூர் சந்திப்பில் இருந்து என்.சி.டி.பி.எஸ். சந்திப்பு வரையிலான அகல கான்கிரீட் சாலை ஆகிய 4 திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.148 கோடி ஆகும்.

பின்னர் அவர், சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ஊக்கங்களையும், முன்னுரிமைகளையும் அளித்துவருகிறார். அதன் விளைவாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் துறைமுகங்கள் அனைத்தும் சரக்கை கையாள்வதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.

10 கோடி டன் இலக்கு

2014-ம் ஆண்டு வரையில் சரக்கை கையாளும் திறன் அனைத்து துறைமுகங்களிலும் 300 மில்லியன் டன் என்ற அளவிலேயே இருந்தது. இது தற்போது 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கன்டெய்னர்களை கையாளும் நேரம் 43 மணி நேரத்தில் இருந்து 27 மணி நேரமாக குறைந்துள்ளது.

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்த 2 துறைமுகங்களின் வளர்ச்சி 13.1 சதவீதமாக இருந்தது. இந்த துறைமுகங்களில் ரூ.56 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்த துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் திறனும், செயல்பாடுகளும் இன்னும் மேம்படும்.

சரக்குகளை கையாளும் பிரிவில் 10 லட்சம் டன் சென்னை துறைமுகத்திலும், 60 லட்சம் டன் காமராஜர் துறைமுகத்திலும் அதிகரிக்கப்படும். இதன் மூலம் வரும் ஆண்டில் 70 லட்சம் டன் சரக்குகளை இந்த துறைமுகங்கள் கையாளும். இதனால் சரக்குகளை கையாளும் திறன் சுலபம் அடையும்.

இது தேசிய மற்றும் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்தும் வழி ஆகும். இந்த 2023-24-ம் நிதி ஆண்டில் சரக்குகளை கையாளும் திறனாக 10 கோடி டன் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை-மதுரவாயல் சாலை

சென்னை-மதுரவாயல் உயர்மட்ட விரைவுசாலை பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளன. இந்த பணிகள் முடிவடைந்தால் சரக்கு போக்குவரத்து மிக துரிதமாக நடைபெறுவதோடு, சென்னை மக்களின் பொது போக்குவரத்து மிக எளிதாகி விடும். சென்னையை அடுத்த மப்பேட்டில் ரூ.349 கோடியில் நவீன பன்னடக்கு தளவாட பூங்கா அமைக்கும் பணி 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும்.

மத்திய அரசின் முயற்சியாக கடல்சார் வழித்தடம் 5 ஆயிரத்து 600 கடல் மைல் நீளத்தில் அமைகிறது. இதனால் சென்னை-ரஷியா இடையிலான கப்பல் போக்குவரத்து பயணம் 10 முதல் 12 நாட்களுக்குள் அமையும். நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் வர்த்தகத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story