மாதவரம்-தரமணி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் தாமத காரணம் என்ன? அதிகாரிகள் விளக்கம்


மாதவரம்-தரமணி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் தாமத காரணம் என்ன? அதிகாரிகள் விளக்கம்
x

சென்னை மாதவரம்-தரமணி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் முடிவதில் தாமதம் தொடருகிறது. இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை

2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.61,843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் இடையே 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே பெரம்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஜெமினி, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, மந்தைவெளி, அடையாறு, தரமணி உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வருகின்றன. ஆனால் மாதவரம்-தரமணி வழித்தடத்தில் நடக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகள் நிறைவு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மாதவரம்-தரமணி இடையே...

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன (சி.எம்.ஆர்.எல்.) அதிகாரிகள் கூறியதாவது:-

மாதவரம்-தரமணி வழித்தடத்தில் ரெயில் நிலையங்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டரும் கோரப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் அதிக விலை குறிப்பிடப்பட்டதால், 2021-ம் ஆண்டில் போடப்பட்ட 6 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பணிகளுக்கான புதிய ஒப்பந்தம் கோர வேண்டியிருக்கிறது. மேலும் ஏலத்தில் ஒரு நல்ல போட்டியை ஏற்படுத்தவும், நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையை பெறவும் டெண்டர் விவகாரத்தில் சில மாற்றங்களை செய்ய இருக்கிறோம். இந்த திட்டத்தின் பெரும்பகுதி நிதி, சர்வதேச வங்கியிடம் இருந்தே கடனாக பெறப்படுகிறது. இந்த கடனுக்கான நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால், புதிதாக விடுக்கப்படும் டெண்டரில் மேலும் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் சில நிபந்தனைகளை மாற்றியமைக்கப்பட இருக்கிறது.

டெண்டரில் புதிய நடைமுறைகள்

டெண்டர் நடைமுறைகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது, மேலும் இந்த மாத இறுதிக்குள் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களை இறுதி செய்வோம். அதற்கான செயல்முறையை விரைவுபடுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்-கெல்லீஸ், கே.எம்.சி.-ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை-அடையாறு, அடையாறு-தரமணி, கொளத்தூர்-நாதமுனி என 6 பிரிவுகளாக இந்த டெண்டர் பணியானது பிரித்து வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்த பணிகள் இன்னும் வேகமாக முடிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட டெண்டர் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்டவை காரணமாக ஏற்கனவே கட்டுமான பணிகள் 1½ ஆண்டுகள் தாமதமாகி இருக்கும் நிலையில், புதிய டெண்டர் நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு, பணிகள் இனிமேல் தான் நடைபெற இருக்கின்றன. எனவே இந்த பணிகள் நிறைவடைய மேலும் காலதாமதம் ஏற்படலாம், அதாவது 2028-ம் ஆண்டு வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story