தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு..!


தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு..!
x
தினத்தந்தி 29 Nov 2023 9:16 AM GMT (Updated: 29 Nov 2023 9:23 AM GMT)

அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தொடர் மழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணி காரணமாக பச்சை வழித்தடத்தில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு தற்காலிகமாக மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (29.11.2023) மதியம் 1:45 மணி முதல் 2.15 மணி வரை வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரெயில் நிலையங்களில் தற்காலிகமாக மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில், புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் தற்காலிகமாக கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். அதேபோல், பரங்கி மலை மற்றும் விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக அசோக் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.

பரங்கி மலை மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் பயணிகள் நீலவழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று மாறி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story