சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லை விரிவாக்கம்: புதிதாக 1,225 கிராமம் சேர்ப்பு


சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லை விரிவாக்கம்: புதிதாக 1,225 கிராமம் சேர்ப்பு
x

கோப்புப்படம்

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லை விரிவாக்கம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் எல்லை 1,189 சதுர கி.மீ. அளவில் இருந்து 1,225 கிராமங்களை புதிதாக சேர்த்து 5 மடங்காக அதாவது 5,904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) நிர்வாக எல்லை, சென்னை மாவட்டம் தவிர காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கி.மீ. அளவுக்கு உள்ளது. இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ.-வின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

அதில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கி.மீ. அளவில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்து 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆட்சியில் சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்கம் செய்வது தொடர்பாக 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. விரிவாக்கத்துக்கான ஒப்புதலை அவர் 14-ந்தேதி அளித்தார்.

அதன்படி 8,878 சதுர கி.மீ.க்கு பதிலாக 5,904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் வரையில், 1,225 கிராமங்கள் புதிதாக சி.எம்.டி.ஏ. வரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story