சென்னை- மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி 'டிக்கெட்' கள்ளச்சந்தையில் விற்பனை


சென்னை- மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை
x
தினத்தந்தி 6 May 2023 2:52 PM GMT (Updated: 6 May 2023 2:52 PM GMT)

சென்னை- மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி 'டிக்கெட்' கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஐ.பி.எல். போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண ரசிகர்கள் திரண்டனர். இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சேப்பாக்கம் வாலாஜா சாலை,பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்துக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் கலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த கோகுல் (27), சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா (29), பாலாஜி (24), போரூர் காரப்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (20) உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம், அவர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 19 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டி நடைபெற்ற போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் சிக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story