மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி


மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி
x

மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒலிக்கருவி வசதி திட்டத்தை, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மாநகர பஸ்களில் புதிய திட்டம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி மூலம் பஸ் நிறுத்தம் குறித்த ஒலி அறிவிப்பு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை பல்லவன் சாலை பணிமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஜி.பி.எஸ். கருவி மூலம் பஸ் நிறுத்தம் குறித்த ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஒரு மாநகர பஸ்சில் ஏறி, மக்களுடன் மக்களாக உதயநிதி ஸ்டாலின் பயணம் செய்தார். பல்லவன் சாலை பணிமனையில் இருந்து பிராட்வே வரை அவர் பஸ்சில் பயணித்தார். அவருடன் அமைச்சர்களும் உடன் சென்றனர். இந்த பயணத்தின்போது ஜி.பி.எஸ். கருவி வழியாக ஒலிபெருக்கி மூலம் வரும் அறிவிப்புகள் சரியாக இருக்கிறதா? பஸ் நிறுத்தங்களின் விவரம் சரியாக சொல்லப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு ஆகும். பொதுமக்களுக்கும் இது மிகவும் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். முதற்கட்டமாக இந்த வசதி 150 பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து பஸ்களிலும் விரிவுபடுத்தப்படும். இதற்கான திட்டம் இருக்கிறது. ஏனெனில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் மக்களுக்கு இதுபோன்ற திட்டம் நிச்சயம் பெருமளவில் கைகொடுக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு பஸ்சில் பயணித்துள்ளேன். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் எப்போது அமைச்சராக போகிறேன் என்று அனைவருமே கேட்கிறீர்கள். அதுகுறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

100 மீட்டர் முன்பாகவே...

இந்த புதிய திட்டத்தின்படி, பஸ் நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பஸ் நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொண்டு எந்தவித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பஸ்சில் இருந்து இறங்கிசெல்ல ஏதுவாக இருக்கிறது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும். விரைவில் இது அனைத்து பஸ்களிலும் நடைமுறைக்கு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்", என்றனர்.

மெட்ரோ ரெயில் போல...

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் ஜி.பி.எஸ். மூலம் பஸ் நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 150 பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேற்கொண்டு கூடுதலாக ஆயிரம் பஸ்களில் செயல்படுத்த சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது", என்றனர்.

சென்னையில் மெட்ரோ ரெயில்களில் முன்கூட்டியே உரிய நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதுபோலவே மாநகர பஸ்களிலும் இந்த சேவை தொடங்கப்பட்டிருப்பது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story