கோத்தகிரி பகுதியில் பூத்துக் குலுங்கும் செர்ரி ப்ளாசம் மலர்கள்


தினத்தந்தி 24 Aug 2023 2:00 AM IST (Updated: 24 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் செர்ரி ப்ளாசம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் செர்ரி ப்ளாசம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

செர்ரி ப்ளாசம் மலர்கள்

கோத்தகிரியின் பல பகுதிகள் மற்றும் கோடநாடு செல்லும் சாலையோரங்களில் காண்பவர் களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக செர்ரிப்பூ மரங்களில் மலர்கள் கொத்துகொத்தாக பூத்துக் குலுங்கி வருகின்றன. சாலையோர மரங்களில் இளம் ஊதா நிறத்தில் ரம்மியமாய் காட்சியளிக்கும் இந்தப் பூக்கள் ஜப்பான் நாட்டின் தேசிய மலராகும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி பூ ப்ளாசம் மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பூக்க தொடங்கியுள்ளது.

வசந்த காலத்தில் பூக்கும் இந்த மலர்கள் செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை இலைகள் உதிர்ந்து மரம் முற்றிலும் பூவாக காட்சியளிக்கும். இந்தப் பூக்கள் ஜப்பான் நாட்டின் தேசிய மலராகும். வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் பூக்கும் இந்த பூக்களை சக்குரா பூக்கள் என்றும் தமிழகத்தில் அழைக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இந்தியாவில் இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குளிர்காலத்தில் அதிகமாக இந்த மலர்கள் பூத்து குலுங்குகின்றன. அட்லாண்டாவில் ஆண்டுதோறும் செர்ரிப்பூ ப்ளாசம் திருவிழா நடத்துவது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 அடி உயரம் வரை மரங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை தேடி தேனீக்கள், சிட்டுக்குருவிகள் அணில்கள் போன்றவை உணவுக்காக தேடி வருகின்றன. இப் பூக்களில் இருந்து ஷாம்பு, சென்ட் போன்ற வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் இந்த பூக்கள் மருத்துவ குணமும் கொண்டவையாகும்.

சுற்றுலா பயணிகளைக் கவரும் இந்த பூ மரங்களை வனத்துறையினர் சாலையோரங்களில் நடவு செய்து, பராமரித்து வருகின்றனர். சாலை ஓரங்களில் சீசன் காரணமாக ரம்மியமாய் காட்சியளிக்கும் இந்த பூக்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகைப் படங்களும் எடுத்து செல்கின்றனர்.




Next Story