நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி 2,409 பேர் பங்கேற்பு


நாமக்கல் மாவட்டத்தில்  பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி  2,409 பேர் பங்கேற்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 2,409 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 2,409 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சர்வதேச செஸ் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக பார்ப்பதற்காகவும், சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடவும், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட அளவில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செஸ் போட்டியை நடத்தி மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்காக 2 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தனியாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை தனியாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தனியாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தனியாகவும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்துவதற்காக போட்டிகள் நடைபெற்றது.

2,409 பேர் பங்கேற்பு

இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 216 மாணவர்களும், 205 மாணவிகளும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் 447 மாணவர்களும், 373 மாணவிகளும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 318 மாணவர்களும், 270 மாணவிகளும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 368 மாணவர்களும், 212 மாணவிகளும் என மொத்தம் 1,349 மாணவர்கள், 1,060 மாணவிகள் என மொத்தம் 2,409 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள். ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல் 3 இடங்களை பெறக்கூடிய மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மாவட்டத்தில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்தில் நடக்கக்கூடிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க மற்றும் சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட அழைத்து செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story