வட்டார அளவிலான செஸ் போட்டி
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களுடன் செஸ் விளையாடினார். பின்னர் அவர் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி வட்டார அளவிலான 175 பள்ளிகளை சேர்ந்த 550 மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டி தற்போது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இதே போல் வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந் தேதி மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது.
இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, சிதம்பரம், சைமன்ஜார்ஜ், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.