செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு


செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு
x

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது உலக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 29-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்க உள்ளது. இப்போட்டியில் 187 சர்வதேச நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதன் காரணமாக தற்போது மாமல்லபுரத்தில் முக்கிய இடங்களில் இரவு, பகலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் முதல் கிழக்கு கடற்கரைச்சாலை கோவளம் வரை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிகள், சவுக்கு தோப்புகள், காலி மைதானங்கள் உள்ளன.

இப்பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சர்வதேச செஸ் வீரர்கள் தங்க உள்ளதால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நேற்று முதல் 3 குட்டி டிரோன்கள் மூலம் அப்பகுதிகளை போலீசார் கண்காணிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நுண்ணறிவு போலீசாரை கொண்டு டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தொடங்கி வைத்தார். அப்போது மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பலர் இருந்தனர்.

1 More update

Next Story