செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய பெண்கள் அணிக்கு முதல் தோல்வி


செஸ் ஒலிம்பியாட்டின் பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணி முதல் தோல்வியை சந்தித்தது.

சென்னை,

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தரப்பில் தலா 3 அணிகள் களம் கண்டுள்ளது.

இந்த தொடரில் 9-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் பிரேசிலை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் அர்ஜூன் எரிகாசி, சசிகிரண் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி ஆகியோர் டிரா செய்தனர்.

இந்தியா 2-வது அணி, அஜர்பைஜானுடன் மோதியது. இதில் இந்திய இளம் வீரர் டி.குகேஷின் வீறுநடைக்கு அஜர்பைஜான் வீரர் மேமட் யரோவ் சகிரியர் முட்டுக்கட்டை போட்டார். இவர்கள் இடையிலான ஆட்டம் 34-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து 8 வெற்றிக்கு பிறகு குகேஷ் சந்தித்த முதல் டிரா இதுவாகும்.

சரின் நிஹல்-மேம்டோவ் ரவுப் இடையிலான ஆட்டமும் டிரா ஆனது. மற்றொரு இந்திய வீரர் சத்வானி ரானக் தோல்வி அடைந்ததால் பிரக்ஞானந்தா ஆட்டத்தின் மீது எல்லோருடைய கவனமும் திரும்பியது. கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 66-வது காய் நகர்த்தலில் டுரார் பேலி வாசிப்புக்கு 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தியா 3-வது அணி தங்களை எதிர்த்த பராகுவேயை 3-1 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தது. இந்தியா 3-வது அணியில் சேதுராமன், முரளி கார்த்திகேயன், அபிமன்யு புரானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். சூர்யசேகர் கங்குலி தோல்வி அடைந்தார்.

9 சுற்று முடிவில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 2-வது, அர்மேனியா தலா 15 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியா 1, அஜர்பைஜான், அமெரிக்கா உள்பட 7 அணிகள் 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளன. இந்தியா 2-வது அணி 10-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.

பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணி போலந்துடன் மோதியது. இதில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, காஷ்லிங்ஸ் கயா அலினாவையும், ஹரிகா, சோக்கோ மோனிகாவையும், தானியா சச்தேவ், மலிக்கா மரியாவையும் டிரா செய்தனர். இதனால் எஞ்சிய வைஷாலி (இந்தியா)-கியோலபசா ஒலிவியா (போலந்து) இடையிலான ஆட்டம் மீது எதிர்பார்ப்பு எகிறியது.

கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழக வீராங்கனை வைஷாலி 80-வது காய்நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்த ஆட்டத்தில் இந்தியா 1-வது அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் போலந்திடம் சரண் அடைந்தது. முதல் 7 சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற்று இருந்த இந்தியா 1-வது அணி 8-வது சுற்றில் டிரா கண்டு இருந்தது. தற்போது முதல் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா 1-வது அணியின் தங்கப்பதக்க வாய்ப்பு சிக்கலாகி உள்ளது.

இதுவரை தனி அணியாக முதலிடத்தில் இருந்த இந்தியா 1-வது அணி 9-வது சுற்றுக்கு பிறகு போலந்து, கஜகஸ்தான், ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தை (தலா 15 புள்ளி) பகிர்ந்துள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணி எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 1-வது அணி அடுத்து கஜகஸ்தானுடன் மோத உள்ளது.

அதே சமயம் பெண்கள் பிரிவில் மற்ற இரு இந்திய அணிகளுக்கும் தித்திப்பாக அமைந்தது. இரு அணிகளும் 6-வது வெற்றியை சுவைத்தது. இந்தியா 2-வது அணி சுவிட்சர்லாந்தை 4-0 என்ற புள்ளி கணக்கில் பந்தாடியது. வந்திகா, பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்தியா 3-வது அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் எஸ்தோனியாவை வீழ்த்தியது. இந்தியாவின் ஈஷா கரவாடே, விஷ்வா வஸ்னவாலா தங்களது ஆட்டங்களில் டிரா கண்ட நிலையில் நந்திதா, சஹிதி வர்ஷினி வெற்றி தேடித்தந்தனர். 10-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.


Next Story