செஸ் ஒலிம்பியாட் போட்டி: கல்லூரி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டி:  கல்லூரி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
x

விழுப்புரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி- கல்லூரி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னம் அச்சிட்ட பள்ளி- கல்லூரி வாகனங்களையும், ஆட்டோக்களில் இலச்சினை மற்றும் சின்னத்திற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பள்ளி- கல்லூரி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் இலச்சினை சின்னம் ஒட்டி அந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகின்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகள் பங்கேற்பதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இத்தகைய போட்டியானது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறுவது என்பது பெருமை வாய்ந்த நிகழ்வாகும். இப்போட்டிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மூலம் பல்வேறு வகையான போட்டிகள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதேபோல் மகளிர் குழுக்கள் மூலமாகவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடந்தாலும் நம் ஊரில் நடப்பது நமக்கு பெருமை என்ற மனநிறைவோடு எல்லோரும் மகிழ்ச்சியாக இப்போட்டியை வரவேற்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாணவ- மாணவிகள் அதிகளவில் பங்கேற்று செஸ் போட்டியின் சிறப்புத்தன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story