ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி


ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி
x

வத்தலக்குண்டுவில் ஓடும் பஸ்சில் டிரைவர் நெஞ்சுவலியால் திடீரென்று மயங்கி விழுந்தார். சாமர்த்தியமாக அவர் ‘பிரேக்’ பிடித்ததால் பயணிகள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல்

மயங்கி விழுந்த டிரைவர்

தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை பெரியகுளத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பெத்துராஜ் இருந்தார். மேலும் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மஞ்சளாற்று பாலத்தை கடந்து பஸ் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் பாஸ்கரன் திடீரென்று மயங்கி ஸ்டீயரிங் மீது விழுந்தார். இதனால் பஸ் சட்டென்று நின்றது. அப்போது இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் முன்பக்கமாக தள்ளப்பட்டனர்.

இதனால் விபத்து ஏதும் நடந்துவிட்டதோ என பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது தான் பஸ்சின் டிரைவர் ஸ்டீயரிங் மீது மயங்கி விழுந்தது தெரியவந்தது. அவர் தனது காலை பிரேக் மீது வைத்து சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

சாமர்த்தியம்

இதைத்தொடர்ந்து கண்டக்டர் பெத்துராஜ் மற்றும் பயணிகள் மயங்கி விழுந்த பாஸ்கரனை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பாஸ்கரன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓடும் பஸ்சில் டிரைவர் மயங்கி விழுந்த சம்பவம் வத்தலக்குண்டுவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நெஞ்சுவலியால் மயக்கமடைந்த நிலையிலும், பிரேக் பிடித்து விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றிய பாஸ்கரனின் சாமர்த்தியத்தை பலரும் பாராட்டினர்.


Next Story