1 கிலோ கஞ்சாவுடன் சிதம்பரம் கல்லூரி மாணவர் கைது
கடலூரில் 1 கிலோ கஞ்சாவுடன் சிதம்பரம் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய வேட்டை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சாராயம், கஞ்சா விற்பனை செய்து வரும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் தயாள்ராஜ், கணபதி, ஆயுதப்படை காவலர் மோகன்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்த போது, அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர்.
சுற்றி வளைத்து பிடித்தனர்
உடனே அவர்களை போலீசார் தங்களது இரு சக்கர வாகனங்களில் துரத்திச்சென்றனர். அவர்கள் 2 பேரும் கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே சென்ற போது, அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் பையுடன் அமர்ந்து வந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார், விசாரித்தனர்.
1 கிலோ கஞ்சாவுடன் கைது
விசாரணையில், அவர் சிதம்பரம் கீழசெங்கல்மேட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் அஜய் (வயது 20) என்பதும், தப்பி ஓடியது அவரது நண்பர் லாலி என்பதும் தெரிந்தது. தொடர்ந்து அவரது பையை சோதனை செய்த போது, அதில் 5 கிராம் அளவில் சிறு, சிறு பொட்டலமாக 100 பொட்டலங்களும், மற்றொரு கவரில் 600 கிராம் இலையும், தழையுமாக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. மொத்தம் 1 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
தொடர்ந்து அஜயிடம் போலீசார் விசாரித்த போது, அவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருவதும், அவருடன் கஞ்சா புகைக்கும் போது நண்பரான லாலியும் சேர்ந்து புதுச்சேரிக்கு சென்று, அங்கு அடையாளம் தெரியாத சிலரிடம் கஞ்சாவை வாங்கி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்திக்கொண்டு சென்றது தெரிந்தது.
இதையடுத்து அஜயை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான லாலியை தேடி வருகின்றனர்.
முன்னதாக தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜிகுமார், கரிகால்பாரிசங்கர் உடனிருந்தனர்.