பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர், தெலுங்கானா கவர்னர் நேரில் அஞ்சலி


பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர், தெலுங்கானா கவர்னர் நேரில் அஞ்சலி
x

பிரபல பாடகி மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் நேரில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.


சென்னை,


தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பக்தி பாடல்களையும், தனி ஆல்பங்களையும் அவர் பாடியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு சார்பில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார் என கூறப்படுகின்றது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது குடியிருப்பில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது.


Next Story