மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்


மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்
x
தினத்தந்தி 6 Aug 2023 3:28 AM GMT (Updated: 6 Aug 2023 5:16 AM GMT)

மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மாரத்தான் போட்டி காலை 4 மணிக்கு தொடங்கியது. அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 73 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 4 மணிக்கு தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடைந்தது. மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கிய மாரத்தான் தீவுத்திடல் மைதானத்தில் முடிந்தது.

அதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பரிசுத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 9 பிரிவுகளில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பரிசுகளை முதல்-அமைச்சர் வழங்கினார். மாரத்தானில் பங்கேற்ற 1,063 திருநங்கை, திருநம்பிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

பரிசுகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாரத்தானிற்கு பெறப்பட்ட பதிவு கட்டணம் ரூ.13.42 கோடி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

மேலும் 73,206 பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் உலக சாதனை அமைப்பினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.


Next Story