பொன்முடியிடம் செல்போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பொன்முடியிடம் செல்போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அமலாக்கத்துறை நடத்திய விசாரணை தொடர்பாக அமைச்சர் பொன்முடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள அவருக்கு அறிவுரை கூறினார்.

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை வீடு உள்பட 9 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனை அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை சாஸ்திரிபவனுக்கு நேற்று முன்தினம் இரவு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

நள்ளிரவு வரை அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விசாரணை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை, செல்போனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொடர்பு கொண்டு பேசி, அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக கேட்டறிந்தார்.

துணிச்சலுடன் எதிர்கொள்ள அறிவுரை

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதல்-அமைச்சர், துணிச்சலுடனும், சட்டரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story