நாளை பீகார் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார்.
சென்னை,
வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கிறார். திருவாரூரில் நேற்று நடைபெற்ற 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 23-ந் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க இருக்கிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) பீகார் செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமா? அல்லது கருத்து வேறுபாடு காரணமாக கடைசி நேரத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்காமல் காரணம் சொல்வார்களா? என்ற கேள்வியும் ஏற்பட்டு உள்ளது. இதனால் எந்தெந்த கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பது நாளை மாலைதான் தெரியவரும்.