முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை


முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை
x

திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை வருகிறார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை வருகிறார். தொடர்ந்து அவர் நாளை தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்கிறார்.

முதல்- அமைச்சர் இன்று வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) மாலை திருவண்ணாமலைக்கு வருகிறார்.

அவருக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து சோமாசிபாடி, சோமாசிபாடி புதூர், திண்டிவனம் பைபாஸ் சாலை மேம்பாலம் அருகில், பைபாஸ் சாலையில் உள்ள திருநேர்த்தி அம்மன் கோவில் அருகில் என பல்வேறு இடங்களில் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மூலம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதனையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகின்றார்.

பயிற்சிப் பட்டறை

தொடர்ந்து மாலை 4 மணியளவில் திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் முதல்- அமைச்சர் பங்கேற்கிறார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் முதல்- அமைச்சர் சிறப்புரையாற்றுக்கின்றார். அதன் பின்னர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை நகராட்சி பள்ளி எதிரில் உள்ள கலைஞர் திடலில் திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்- திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன் இவர்களது மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றார்.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

முதல்- அமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story