கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விவசாய, வணிக பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி


கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விவசாய, வணிக பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:46 PM GMT)

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நேற்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த விவசாயிகள், தொழில் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்தார்.

விழுப்புரம்

"கள ஆய்வில் முதல்-அமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக விழுப்புரத்துக்கு வந்தார்.

கலந்தாய்வு கூட்டம்

தொடர்ந்து மாலையில் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 3 மாவட்டங்களை சேர்ந்த குறு மற்றும் சிறு தொழில் சங்கம், திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கம், கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஈ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள், மீனவ பிரதிநிதிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் அரிசி ஆலை அதிபர் சங்கங்கள், விவசாய சங்க பிரதிதிநிதிகள் என்று பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

விழுப்புரத்தில் ஐ.டி. பார்க்

அப்போது குறு மற்றும் சிறு தொழில் சங்க நிர்வாகிகள் தரப்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விழுப்புரம் நகரத்தில் ஐ.டி. பார்க், கனரக தொழில் நிறுவனங்கள், பாசன விளைநிலம் இல்லாத பகுதிகளை கண்டறிந்து சிட்கோ மூலம் தொழிற்பேட்டை அமைத்திட வேண்டும்.

மேலும் தொழில் முனைவோர்களுக்கு கருத்தரங்கு, பயிற்சிகள் அளிப்பது, உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்த வணிக வளாகம், பொற்கொல்லர்களுக்கு பாதுகாப்பான தொழிற்பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி பேசினார்கள்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை

அதேபோன்று உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கிய தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கவும் ஆவன செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினார்கள்.

மேலும் திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில் முனைவோர் சங்கத்தின் சார்பில் திண்டிவனத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைத்திட வேண்டும். திண்டிவனம் சிட்கோவுக்கு தனி துணை மின்நிலையம் அமைப்பது என்பது போன்ற கோரிக்கையையும் முன்வைத்து பேசினார்கள்.

ரேசன் கடைகளில் பாரம்பரிய அாிசி வகைகள்

விவசாயிகள் சங்கத்தினர் பேசுகையில், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க, ஆற்று முகத்துவாரத்தில் தரைமட்ட தடுப்பணை அமைக்க வேண்டும். முந்திரி, வாழை, பலா போன்ற வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி வருவாய் ஈட்ட தொழில் சார்ந்த திட்டங்களை உருவாக்க வேண்டும்.

கரும்பு விவசாயத்திற்கான சொட்டு நீர் பாசனத்திற்கு வழங்கப்படும் மானியத்தை 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வழங்கிட வேண்டும்.

ரேஷன் கடைகளில் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அனைத்து சிறு தானியங்களை விற்பனை செய்தல், தென்னை நுண்ணூட்டங்களுக்கு மானியம் வழங்குதல், உளுந்து சார்ந்த தொழிற்சாலைகளை உளுந்தூர்பேட்டையில் அமைப்பது, பெரியசெவலையில் இருந்து சிவப்பட்டினம் வரை செல்லும் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.

சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதியில் மக்காச்சோளம், மரவள்ளி சார்ந்த தொழிற்சாலை அமைப்பது, செஞ்சியில் வேளாண் உற்பத்தி கருவிகள் நிலையம் அமைப்பது, சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தனியாக கொள்முதல் நிலையங்களை அமைத்திட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தை விதை உற்பத்தி மண்டலமாக அறிவிப்பது, வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மீன்பிடி வலை பின்னும் கூடங்கள் தேவை

40 வேளாண் விளைபொருட்களுக்கு சந்தை கட்டண வசூலை ரத்து செய்ததற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினா் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரசிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட பொது வசதி மையம் அமைத்திட வேண்டும். அரிசி ஆலைகளுக்கு உச்ச நேர மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்தினரும் பேசினர்.

அதேபோல், மீனவ சங்க பிரதிநிதிகள் பேசுகையில், மீன்பிடி தடைகாலத்தில் மீனவ குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

கடலூர் மாவட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில் நல்லவாடு, சாமியார்பேட்டை, சின்னூர் வடக்கு மற்றும் தாண்டவராய சோழகன்பேட்டை ஆகிய பகுதியில் புதிய வலை பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முதல்-அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது, தலைமை செயலாளர் இறையன்பு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, கலெக்டர்கள் விழுப்புரம் பழனி, கடலூர் பாலசுப்பிரமணியம், கள்ளக்குறிச்சி ஷ்ரவன்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story